புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2023-07-09 18:45 GMT

வேகத்தடை அமைக்க வேண்டும்

குளச்சலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் கூட்டுமங்கலம் உள்ளது. அந்த பகுதியில் மக்கள் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 2 பேர் விபத்தில் இறந்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் மக்கள் சாலையை கடக்கும்போது அச்சத்துனேயே சென்று வருகின்றனர். எனவே, விபத்து ஏற்படாமல் இருக்கவும், உயிரிழப்பை தடுக்கவும் பஸ்நிறுத்தம் பகுதியிலும், 200 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள டிரான்பார்மர் பகுதியிலும் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விபத்து பகுதி என சாலையோரத்தில் விழிப்புணர்வு பதாகைகளையும் அமைக்க வேண்டும்.

-தேவிசக்தி, குளச்சல்.

நடவடிக்கை தேவை

நாகர்கோவில் கோர்ட்டு ரோடு எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாக காணப்படும். இதனால், பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைபாதையின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கம்பங்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கேபிள் ஓயர்கள் மிகவும் தாழ்வாகவும், சிறுவர்கள் கைக்கு எட்டும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஓயர்களை சிறுவர்களுக்கு எட்டாத வகையில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபானந்து, பெருவிளை.

கோவிலை பராமரிக்க வேண்டும்

கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாதானபுரத்தில் பூஜை எடுப்பு மடம் கோவில் உள்ளது. இந்த கோவில் மண்டபம் தற்போது பராமரிப்பு இல்லாமல் ஜன்னல் கதவுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. சுவர்களிலும் விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. சிலர் மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கு வீசிவிட்டு செல்கின்றனர். எனவே, சேதமடைந்த கோவில் மண்டபத்தை சீரமைத்து பாராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகர், சந்தையடி.

மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

அழகியபாண்டியபுரம் பேரூராட்சியில் மேலபிளவக்கல்விளை உள்ளது. இந்த பகுதியில் உள்ள தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிராங்கிளின் கனிஷ்குமார், எட்டாமடை.

சுகாதார சீர்கேடு

குழித்துறை பழைய பாலம் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் சாலையின் இரு பக்கமும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபு, குழித்துறை.

வாகன ஓட்டிகள் அவதி

பேயன்குழி பாலம் பகுதியில் சாலையோரத்தில் ஓடை செல்கிறது. இந்த ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்போது, ஓடையில் உள்ள கழிவுகளை தூர்வாரி பாலத்தின் மீது வீசியுள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுகளை உடனடியாக அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ.சுபின் பேயன்குழி.

திறக்கப்படாத அலுவலகம்

பேச்சிப்பாறையில் சுற்றுவட்டார மலைப்பகுதி மக்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திற்பரப்பு வருவாய் கிராமத்திலிருந்து பிரித்து புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் மலையோர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சமீப காலமாக இந்த அலுவலகம் முறையாக திறக்கப்படுவதில்லை. பூட்டியே கிடக்கிறது. இதனால், பல்வேறு தேவைகளுக்கான வரும் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிராம நிர்வாக அலுவலகத்தை முறையாக திறக்க வேண்டும்.

-ராஜசேகர், பேச்சிப்பாறை

Tags:    

மேலும் செய்திகள்