தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து புகார்: மதுரை வக்கீலிடம் போலீசார் விசாரணை
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து புகார்: மதுரை வக்கீலிடம் போலீசார் விசாரணை
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார். இவர் ஜனாதிபதி, பிரதமர், தமிழக கவர்னர், மத்திய உள்துறை அமைச்சர், என். ஐ.ஏ. டைரக்டர், மற்றும் தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு ஒரு புகார் மனு அனுப்பி இருந்தார். இந்த நிலையில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சும் நடந்தது. மதுரையில் நடந்த குண்டு வீச்சில் நெல்பேட்டை சம்சுதீன், சம்மட்டிபுரம் உசேன், மாப்பாளையத்தை சேர்ந்த அபுதாகிர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அபுதாகிர் உடன் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் வெடிகுண்டு வீசிய மற்றொரு நபரை இன்னும் கைது செய்யவில்லை. மேலும் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று மனு ஒன்றை தமிழக டி.ஜி.பி. மற்றும் மாவட்ட கலெக்டருக்கு வக்கீல் முத்துக்குமார் அனுப்பி இருந்தார். அந்த மனு குறித்து விசாரிக்க கீரைத்துறை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்படி புகார் அனுப்பிய வக்கீல் முத்துக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ள கீரைத்துறை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் பேரில் வக்கீல் முத்துக்குமார் நேற்று காலை கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.அவரிடம் இன்ஸ்பெக்டர். பெத்தராஜ் விசாரணை மேற்கொண்டார். அப்போது இன்ஸ்பெக்டர் பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும், மற்றவர்கள் மீது அந்த சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.