வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்குவதில் முறைகேடு என புகார்

வேலூர் புதிய பஸ் நிலைய கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறி வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-25 17:08 GMT

வேலூர் புதிய பஸ் நிலைய கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறி வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குலுக்கல் முறையில் கடை ஒதுக்கீடு

வேலூர் செல்லியம்மன் கோவில் அருகே உள்ள புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு ரூ.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. இங்கு சுமார் 80 கடைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்தக் கடைகளில் ஏற்கனவே இங்கு கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு கடை ஒதுக்கப்படாததால் 12 வியாபாரிகள் கோர்ட்டில் முறையிட்டனர்.

வழக்கு தொடர்ந்த வியாபாரிகளில் பன்னீர்செல்வம், உசேனி, சவுந்தர் ஆகிய 3 வியாபாரிகள் முறையாக மாநகராட்சிக்கு வாடகை உட்பட அனைத்து வரிகளும் செலுத்தி இருந்ததால் அவர்களுக்கு உடனடியாக கடை ஒதுக்க வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் 3 வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் 3 வியாபாரிகளும் குலுக்கல் முறையில் கடைகளை தேர்வு செய்தனர்.

முறைகேடு

அப்போது 3 பேருக்கும் பஸ் நிலையத்தில் முதல் தளத்தில் உள்ள கடைகள் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் அந்த குலுக்கல் பெட்டியில் அனைத்து கடைகள் விவரங்களும் சீட்டில் எழுதிப் போடவில்லை என்றும், முதல் தளத்தில் உள்ள கடைகள் விவரம் மட்டுமே சீட்டில் எழுதி போட்டுள்ளதாகவும், இந்த குலுக்கல் முறைகேடாக நடந்ததாகவும் கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்கள் குலுக்கல் முறையில் முறைகேடு நடந்திருப்பதாக போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்