சாலையில் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது போலீசில் புகார்

சாலையில் திரியும் மாடுகளால் அவ்வபோது விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரி போலீசில் புகார் செய்துள்ளார்.

Update: 2023-05-13 18:45 GMT

சிவகாசி

சாலையில் திரியும் மாடுகளால் அவ்வபோது விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரி போலீசில் புகார் செய்துள்ளார்.

சாலையில் திரியும் கால்நடைகள்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சாலைகளில் திரிகிறது. இந்த மாடுகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் வருவாய்த்துறை அதிகாரிகள், கால்நடைத் துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் கொண்டு குழு அமைக்கப் பட்டு சிவகாசி பகுதியில் சாலையில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ராஜபாளையம் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் சாலையில் மாடுகள் திரிவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அவ்வபோது விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயம் அடைந்து வந்தனர். கடந்த வாரம் கல்லூரி மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இரவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் மாடு ஒன்று குறுக்கே வந்ததால் அவர் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடவடிக்கை

இதனை தொடர்ந்து தங்கள் வீடுகளில் மாடுகளை வளர்க்காமல் சாலைகளில் திரியவிடும் உரிமையாளர்கள் குறித்த மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கணக்கெடுத்தனர். இதில் சுமார் 65 பேர் தங்களுக்கு சொந்தமான சுமார் 200-க்கும் மேற்பட்ட மாடுகளை வீட்டில் வைத்து வளர்க்காமல் சாலைகளில் நடமாட விட்டது தெரியவந்தது. இவர்களுக்கு பல முறை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டும் மாடுகள் சாலைகளில் திரிவது தொடர்ந்து வருகிறது. இதனால் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.

போலீசில் புகார்

இந்த நிலையில் சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரனின் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பாண்டியராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில் மாடுகளை சாலையில் திரிய விட்டால் விபத்துக்கள் ஏற்படும் என்று தெரிந்தும் பலர் தங்களது கால்நடைகளை வீட்டில் அடைத்து வைத்து வளர்க்காமல், சாலைகளில் திரிய விடுகிறார்கள். அவர்கள் விவரம் இத்துடன் இணைத்துள்ளேன். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். புகார் மனுவை பெற்ற போலீஸ் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்