காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி-தர்மபுரியில், வருகிற 12-ந் தேதி நடக்கிறது
தர்மபுரி:
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் வருகிற 12-ந் தேதி தர்மபுரியில் நடைபெற உள்ளது.
பேச்சுப்போட்டி
இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கையில் அறிவித்துள்ளபடி நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாள் அன்று மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி வருகிற 12-ந் தேதி காலை 9.30 மணிக்கு கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
அனுமதி
பள்ளி மாணவர்களுக்கு 4 தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 6 தலைப்புகளிலும் இந்த பேச்சு போட்டிகள் நடத்தப்படும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இயக்குனர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் அனுமதி பெற்று பேச்சு போட்டியில் பங்கேற்கலாம்.
எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த பேச்சு போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.