சேலம் மண்டல அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள்-கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்

Update: 2023-01-11 18:45 GMT

தர்மபுரி:

சேலம் மண்டல அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

விளையாட்டு போட்டிகள்

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் சேலம் மண்டல அளவில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சேலம் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. சேலம் மண்டலத்தில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 10 தொழிற் பயிற்சி நிலையங்களிலிருந்து 350 மாணவர்களும், 150 மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இந்த விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளுக்கு பூப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, எறிபந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகளும், 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1,500மீ, தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகளும் இன்று (வியாழக்கிழமை) மாலை வரை நடைபெறுகிறது.

பதக்கம்-சான்றிதழ்

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் உடனுக்குடன் வழங்கப்பட்டது. அவ்வாறு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் சாந்தி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மண்டல விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள மாநில விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

போட்டியாளர்களுக்கு தங்குமிடம், உணவு வசதி, கழிப்பறை வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவ வசதிகளும், போலீசார் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் ராஜகோபாலன், தர்மபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சிவகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, நகராட்சி கவுன்சிலர் ஜெகன், வக்கீல் அசோக்குமார் மற்றும் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்