மடத்துக்குளம் நால்ரோட்டில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்

மடத்துக்குளம் நால்ரோட்டில் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-24 12:13 GMT

போடிப்பட்டி

மடத்துக்குளம் நால்ரோட்டில் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோவை -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் நகரம் அமைந்துள்ளது. தாலுகா தலைமையகமாகவும் சுற்றுவட்டார கிராமங்களின் முக்கிய சந்திப்பு பகுதியாகவும் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இதனால் இங்கு தினசரி ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். அத்துடன் தினசரி தேசிய நெடுஞ்சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையுடன் குமரலிங்கம்-கணியூர் சாலை சந்திக்கும் பகுதி நால்ரோடு எனப்படுகிறது. இந்த பகுதிக்கு அருகில் அரசு ஆஸ்பத்திரி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதுதவிர அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் பகுதியாகவும் இது உள்ளது. இதனால் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகவே உள்ளது. இந்த பகுதியில் தற்போது சாலை சந்திப்பை குறிக்கும் வகையிலான எச்சரிக்கை விளக்குகள் மட்டுமே உள்ளது. ஆனால் அதனை யாரும் கண்டு கொள்ளாமல் தாறுமாறாக வாகனங்களை இயக்குகின்றனர்.

தானியங்கி சிக்னல்

தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுவதால் சாலையைக்கடப்பது சிரமமான விஷயமாகவே உள்ளது. இதனால் அடிக்கடி இந்த பகுதியில் சிறு சிறு விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே இந்த பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையைக்கடக்கும் வகையில் இங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலன் கருதி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கக்கூடாது.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்