கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்: 367 பேர் கைது

விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் சாலைமறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 367 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-30 15:41 GMT

விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் சாலைமறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 367 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல்-டீசல் விலைஉயர்வை கண்டித்தும், உத்தேச மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும், சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த மாவட்ட தலை நகரங்களில் நேற்று மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் இந்த கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

367 பேர் கைது

அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 367 பேரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் கோவை மாவட்ட செயலாளர் சிவசாமி, கல்யாண சுந்தரம், ஜேம்ஸ், சி.தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த போராட்டம் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் நிருபர்களிடம் கூறும்போது, விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கவில்லை.

இது மக்கள் நலனில் அக்கரை இல்லாததை காட்டுகிறது. மின்சார திருத்த சட்டம் கொண்டு வந்தது மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்கதான் என்றார்.

மேலும் செய்திகள்