10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திவணிக வரித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்வரி வருவாய் ஈட்டுதல் பணி பாதிப்பு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வணிக வரித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வரி வருவாய் ஈட்டுதல் பணி பாதிக்கப்பட்டது.

Update: 2023-07-05 18:45 GMT

தற்செயல் விடுப்பு போராட்டம்

வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில் துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும், முறையற்ற கோட்ட அளவிலான இடமாறுதல், முறையற்ற வரி வருவாய் இலக்கு, முறையற்ற அறிக்கை ஆகியவை களையப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 5, 6-ந் தேதிகளில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும், 6-ந் தேதி சென்னையில் உள்ள ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி

அந்த வகையில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவை சேர்ந்தவர்கள் 80 சதவீதம்பேர் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் வணிக வரித்துறை உதவி ஆணையர், மாநில வரி அலுவலர், துணை மாநில வரி அலுவலர் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை பலரும் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம் வணிக வரித்துறை உதவி ஆணையர் 1, 2 அலுவலகங்கள் மற்றும் திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய வணிகவரி அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காட்சியளித்தது.

பணி பாதிப்பு

இவர்களின் இப்போராட்டம் காரணமாக அரசின் வரி வருவாய் ஈட்டுதல் பணி மற்றும் வரி ஏய்ப்பு விவரங்களுக்கான நோட்டீசு வழங்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்