வேப்லோடையில் வணிகரீதியாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்:பா.ஜ.க.வினர் கோரிக்கை

வேப்லோடையில் வணிகரீதியாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-28 18:45 GMT

தூத்துக்குடி அருகே வேப்பலோடை பகுதியில் நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர்.

இடையூறு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் தலைவர் ரவி தலைமையில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், உடன்குடி நடு பஜாரில் சட்ட விதிமுறைகளை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் அமைக்கப்பட்டு உள்ள போலீஸ் கூண்டை அகற்ற வேண்டும், சாலைகளில் நடமாடி வரும் மாடு, பன்றி உள்ளிட்டவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளின் உரிமத்தை அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள் தலையீடு இன்றி உடனடியாக புதுப்பித்து தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நிலத்தடி நீர்

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா கட்சி தலைவர் ஜெயசங்கர் தலைமையில் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஓட்டப்பிடாரம் தாலுகா முள்ளூர் கிராமத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர், அரசிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததால், முறைகேடாக கொட்டப்பட்ட மண்ணை அள்ளி சென்றனர். மீண்டும் அன்று இரவே மண்ணை மீண்டும் கொட்டி நிரப்பி விட்டனர். புகார் அளித்தவர்களை மிரட்டி உள்ளனர். ஆகையால் உரிய விசாரணை நடத்தி கண்மாய் நீர் வரத்து ஓடையை ஆக்கிரமிப்பை அகற்றவும், தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேப்பலோடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக ரீதியாக கனரக வாகனங்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி தனியார் உப்பளங்கள், ஐஸ் கம்பெனிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆகையால் முறைகேடாக நிலத்தடி நீர் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பயணியர் நிழற்குடை

தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் லாரன்ஸ் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி அருகே சோரீஸ்புரத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் பஸ்சில் ஏறி செல்கின்றனர். இங்கு பயணியர் நிழற்குடை இல்லாததால் மக்கள் பஸ்சுக்காக நின்று கொண்டே இருக்கும் சூழல் உள்ளது. அதே போன்று பஸ்களும் நிற்காமல் சென்று விடுகின்றன. ஆகையால் சோரீஸ்புரத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கவும், அனைத்து பஸ்களும் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்