'டாஸ்மாக்' கடைகளில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுமா?; பொதுநல விரும்பிகள் எதிர்பார்ப்பு

‘டாஸ்மாக்' கடைகளில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுமா? என்பது குறித்து பொதுநல விரும்பிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-01-08 17:45 GMT

பீடி, சிகரெட்டு புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று விளம்பரப் படுத்திக்கொண்டு விற்பனை செய்வது போல், குடி குடியைக் கெடுக்கும் என்று விளம்பரம் செய்துகொண்டு மதுவை விற்றுவருகிறோம்.

அரசுக்கு அதிக வருவாய் வரும் துறைகளில் 'டாஸ்மாக்' முக்கியப் பங்கு வகிக்கிறது. விலை ஏறினாலும் மதுபானங்கள் விற்பனை மட்டும் குறைவது இல்லை. மதுபோதைக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. ஆண்கள் மட்டுமல்ல இளம்பெண்கள்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.

மதுவுக்கு எதிரான குரல்

சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்து, போலீசாரிடம் சிக்கிய இளம்பெண் ஒருவர் செய்த அலப்பறையை யாரும் மறந்திருக்க முடியாது.

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தாலும் பெரும்பாலான கடைகளில் இது பின்பற்றப்படுவது இல்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கைகளிலும் மதுபாட்டில்கள் தவழ்வதை சமூக வலைத்தளங்களில் வெளியாகும் 'வீடியோ' பதிவுகள் மூலம் காண முடிகிறது.

மது ஒருபுறம் சமூகத்தைச் சீரழித்து வந்தாலும், இன்னொருபுறம் மதுவுக்கு எதிராக குரல் ஒலித்துக் கொண்டுதான் வருகிறது.

பொதுநல வழக்கு

ஒட்டுமொத்த இந்தியாவில் மது விற்பனையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மது விற்பனையை கட்டுப்படுத்த, அதன் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு நடந்து வருகிறது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அந்த பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

வழக்கை பல கட்டங்களாக விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கடந்த 5-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், '21 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். பொது நலன் கருதி 'டாஸ்மாக்' கடைகளை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் யோசனையை அரசு பரிசீலிக்குமா? 'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்படுமா? இதுபற்றி பொதுநல விரும்பிகள் என்ன கருதுகிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.

மொத்த விற்பனை

அன்பழகன் (கூலித்தொழிலாளி, உப்புக்கோட்டை):- டாஸ்மாக் கடையின் நேரத்தை குறைப்பது நல்ல யோசனை தான். ஆனால் 2 மணி முதல் 8 மணி வரை என்பதை இரவு 10 மணி வரை என்று மாற்றலாம். மதுப்பிரியர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். நேரத்தை குறைக்கும் போது கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதையும் தடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.

சேகர் (டீக்கடைக்காரர், கெங்குவார்பட்டி):- டாஸ்மாக் கடை நேரத்தை குறைத்தால் அது வரவேற்கத்தக்கது. கடைகளில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் இரவு 9 மணிக்கு மேல் தான் வேலை முடிந்து வீடு திரும்புவார்கள். டாஸ்மாக் கடையை 8 மணிக்கு மூடினால், அவர்கள் மது குடிப்பது குறையும். படிப்படியாக அவர்கள் குடிப்பழக்கத்தில் இருந்து வெளியேற முடியும். அதே நேரத்தில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும் டாஸ்மாக் மதுபானமாக தான் இருக்கிறது. எனவே டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனையை தடுக்க வேண்டும்.

இரவில் அச்சம்

பிரியா (குடும்பத்தலைவி, கம்பம்):- வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு சென்று திரும்பும் பெண்கள் இரவு நேரங்களில் பஸ்சில் பயணம் செய்ய அச்சப்படும் நிலைமை உள்ளது. இரவு நேரங்களில் மது போதையில் பலர் பஸ்களில் பயணம் செய்கின்றனர். அப்போது அவர்கள் தகராறில் ஈடுபடுவது பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இரவு 8 மணிக்குள் டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டால் இரவு நேரங்களில் பயணம் செய்பவர்கள், பணி முடித்து திரும்பும் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மது விற்பனை நேரத்தை குறைப்பதன் மூலம் இந்தியாவில் மது விற்பனையில் தமிழ்நாடு முதலிடம் என்ற அவலநிலையும், மதுபிரியர்களின் மனநிலையும் மாறும் என்ற பொதுநலன் சிந்தனையோடு நீதிபதிகள் 'டாஸ்மாக்' கடை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தாலும், இது கள்ளச்சந்தை மது விற்பனையை அதிகரிக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்