பணிவு இல்லாத துணிவு தவறான பாதைக்கு வழிவகுத்துவிடும் அண்ணாமலை பற்றி ப.சிதம்பரம் கருத்து

பணிவு இல்லாத துணிவு தவறான பாதைக்கு வழிவகுத்துவிடும் என அண்ணாமலை குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.

Update: 2023-03-10 18:45 GMT


பணிவு இல்லாத துணிவு தவறான பாதைக்கு வழிவகுத்துவிடும் என அண்ணாமலை குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.

நூலகம் திறப்பு

சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மருதுபண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது எம்.பி நிதியில் இருந்து நூலகம் அமைத்துள்ளார். அந்த நூலகத்தை நேற்று மாணவ-மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதன் பின்னர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் என்பது கட்டாயமாக இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் உதவியுடன் மகாத்மா காந்தி நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை அனைத்து மாவட்டங்களிலும் அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்

ஆன்லைன் ரம்மியை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பியதை அவர் திருப்பி அனுப்பியது தவறு. தமிழக சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது என்பது புதுபுரளி. இந்த புது புரளியை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தூண்டி விடுகின்றன. தமிழ்நாட்டில் வாழும் வெளி மாநிலத்தவருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாது. வதந்திகளை பரப்புவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணாமலை குறித்த கருத்து

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் அடக்கி வாசிக்கின்றார்கள். பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர்கள் வைஸ்ராய் போல் செயல்படுகின்றார்கள்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னை ஜெயலலிதா போல் ஆளுமை மிக்கவர் என கூறுவது பற்றி கேட்கிறீர்கள். பணிந்து போவது எனது பழக்கம் அல்ல என அவர் பேசியிருக்கிறார். பணிந்து போவதே எனது பழக்கம் இல்லை என்றால், எப்படி ஒரு நல்ல அரசியல் தலைவராக இருக்க முடியும். பணிவும் வேண்டும், அதே நேரத்தில் துணிவும் வேண்டும். பணிவு இல்லாத துணிவு தவறான பாதைக்கு வழிவகுத்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்