ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சை பயிர் கொள்முதல் தொடக்கம்
மிராளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சை பயிர் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சேத்தியாதோப்பு,
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் கிராமத்தில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சை பயிர் கொள்முதல் செய்யும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இளநிலை ஊழியர் மனோகரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாவட்ட உழவர் மன்ற கூட்டமைப்பு செயலாளர் வேல்முருகன், வள்ளலார் விவசாய சங்க செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளிடம் பச்சை பயிர் கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர். இதுகுறித்து கண்காணிப்பாளர் தனலட்சுமி கூறுகையில், பச்சை பயிர் கொள்முதல் தொடக்க நாளிலேயே விவசாயிகள் 300-க்கும் மேற்பட்ட பச்சை பயிர் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு சென்றுள்ளனர். ஒரு கிலோ ரூ.77.55-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்றார்.