வருகிற 16-ந் தேதி மற்றும் 22-ந் தேதிகளில் வடக்கு மாவட்ட தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம்
வருகிற 16-ந் தேதி மற்றும் 22-ந் தேதிகளில் வடக்கு மாவட்ட தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை, வாக்காளர் தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் சுருக்கமுறை திருத்தப்பட்டியலை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அதுபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.
மேலும் இந்த மாம் 21-ந்தேதி முதல் அடுத்த மாதம் 21-ந்தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக சென்று வாக்காளர்களின் விபரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். இதில் தி.மு.க. சார்பில் நியமனம் செய்யப்பட்டு உள்ள பாக முகவர்களின் பணி குறித்து ஆலோசனை செய்வதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான பாக முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பாக முகவர்கள் கூட்டம் வரும் வருகிற 16-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு கலைஞர் அரங்கத்திலும் அன்று மாலை 6 மணிக்கு கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்திலும் கோவில்பட்டி தொகுதி பாக முகவர்கள் கூட்டம் நடக்கிறது. அதுபோல் விளாத்திகுளம் தொகுதி பாக முகவர்கள் கூட்டம் வருகிற 22-ம் தேதி (சனிக் கிழமை) மாலை 5 மணிக்கு விளாத்திகுளம் அம்பாள் நகர் ஜி.வி.எம் மஹாலில் நடைபெறுகிறது.
இதில் சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பாக முகவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.