காரில் வந்து மோட்டார் சைக்கிள் திருடிய 6 பேர் கைது

வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய காரில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-14 18:16 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய காரில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மோட்டார் சைக்கிள் திருட்டு

கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப். சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் யாரப்பாபா (வயது 28), முஜாகிர் (28), ஜீனைத் (29), சுகேவ் (30), ஷாப் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதிக்கு காரில் வந்துள்ளனர்.

அப்போது நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் சீனிவாசன் (27) நேற்று காலை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காரில் வந்தவர்களில் 2 பேர் வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த சீனிவாசனின் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.

6 பேர் பிடிபட்டனர்

இதைக் கண்ட சீனிவாசன் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து தப்பி ஓடியவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற இருவரும் அதிவேகமாக சென்றதால் நாட்டறம்பள்ளி அருகே உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் அருகே கீழே விழுந்தனர்.

அப்போது அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் பிடித்தனர். அதேபோல் காரில் தப்ப முயன்ற நான்கு பேரும் பிடிபட்டனர். பிடிபட்ட 6 பேரையும் அருகிலுள்ள நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆயுதங்கள் பறிமுதல்

போலீசார் காரை பரிசோதனை செய்ததில் கத்தி, மடிக்கணினி, டேப், புளுடூத், துப்பாக்கி வடிவிலான லைட்டர் மற்றும் 8 போன்கள் உள்ளிட்டவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் பிடிபட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் அங்கு ஒப்படைத்தனர். இது தொடர்பாக வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும் இவர்கள் எதற்காக காரில் பயங்கர ஆயுதங்களை கொண்டு வந்தனர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்