மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் பலி
ராணிப்பேட்டை அருகே முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
ராணிப்பேட்டை அருகே முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
தனியார் நிறுவன மேலாளர்
ராணிப்பேட்டை நவல்பூர் அருகே உள்ள வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 48). தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சிப்காட் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (22). இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு ராணிப்பேட்டை அருகே உள்ள பாரதி நகர் பகுதியில், எம்.பி.டி. சாலையில் சுப்பிரமணி மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார். அங்குள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் ஜீவரத்தினம் மோட்டார்சைக்கிளில் வந்துள்ளார்.
2 பேர் பலி
அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி, முன்னால் சென்று கொண்டிருந்த சுப்பிரமணி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி சென்ற சுப்பிரமணி, ஜீவரத்தினம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இவர்கள் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுப்பிரமணி, ஜீவரத்தினம் ஆகிய இருவரும் மருத்துவரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.