மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர்.

Update: 2022-12-04 20:48 GMT

முசிறி:

விவசாயி

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தெற்கு நல்லியம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 40). விவசாயி. இவர் தனது மனைவி பூமணி, மகள் சஞ்சனாவுடன்(14) மோட்டார் சைக்கிளில் புலிவலத்தில் உள்ள வங்கிக்கு சென்று, சஞ்சனா பெயரில் சிறு சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளார். பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்பினர்.

அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் செல்ல சிரமமாக இருந்ததால், பூமணி தனது தம்பி அருணை அங்கு வரவழைத்துள்ளார். இதையடுத்து அருணுடன் மோட்டார் சைக்கிளில் பூமணியும், பெரியசாமியுடன் மோட்டார் சைக்கிளில் சஞ்சனாவும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள் மோதியது

அப்போது எதிரே நல்லியம்பட்டியை சேர்ந்த முத்துசாமியின் மகன் அரவிந்தன்(25) மோட்டார் சைக்கிள், பெரியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதைக்கண்டு, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த பூமணியும், அருணும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் பெரியசாமி, சஞ்சனாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பெரியசாமியை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக கூறினார். இதனால் பூமணி கதறி அழுதார். சஞ்சனாவை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவு

இதற்கிடையே அரவிந்தனை சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த விபத்து குறித்து பூமணி கொடுத்த புகாரின்பேரில் முசிறி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து, அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முசிறி அருகே விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்