மோட்டார் சைக்கிளில் குறுக்கே வந்ததால் இருதரப்பினர் மோதல்
குடியாத்தம் அருகே மோட்டார்சைக்கிளில் குறுக்கே வந்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இருதரப்பினர் மோதல்
குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 38). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பாக்கம் கிராமம் வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். பாக்கம் கெங்கையம்மன் கோவில் அருகே செல்லும்போது எதிரே அதே கிராமத்தை சேர்ந்த பரத், மணியரசு ஆகிய 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அவர்கள் குறுக்கே வந்ததால், அவர்களுக்கும், ஞானவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி உள்ளனர். அதன்பிறகு இரவு ஞானவேல் தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு மீண்டும் பாக்கம் கிராமத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
4 பேர் காயம்
அப்போது பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், ஞானவேல் தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. ஞானவேல் தரப்பினர் தாக்கியதில் பாக்கம் கிராமத்தை சேர்ந்த மனோஜ் (வயது 25), அருண்குமார் (29) மற்றும் 17 வயது வாலிபர் ஒருவர் என மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். பாக்கம் கிராமத்தினர் தாக்கியதில் ஞானவேல் தரப்பை சேர்ந்த தினேஷ் குமார் (25) பலத்த காயம் அடைந்தார். அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு அசம்பாவிதம் சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் கிராமத்தினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தார்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக மனோஜ் அளித்த புகாரின் பேரில் ஞானவேல் உள்ளிட்ட பலர் மீது பரதராமி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல் தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் மனோஜ் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.