சேலத்தில் கவர்னருக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
சேலத்தில் கவர்னருக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசிய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், தமிழகம் முழுவதும் அரசு கல்லூரி மாணவர்களும் கவர்னருக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்துள்ளனர். சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள் திரண்டு கவர்னரை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை 2-வது நாளாக சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தமிழக கவர்னரை கண்டித்தும், அவருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு வாழ்க என்றும், தமிழ்நாடு என்று சொல்ல மறுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவியை எங்கள் மண்ணை விட்டு வெளியேறு என்ற வாசகத்துடன் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கல்லூரி முன்பு கோஷம் எழுப்பியபடி வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், அதையும் மீறி நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து மாணவர்கள் கவர்னரை கண்டித்து சிறிது நேரம் கோஷம் எழுப்பிவிட்டு மீண்டும் கல்லூரிக்குள் சென்றுவிட்டனர்.