மோட்டார்சைக்கிள்- கார் மோதலில் கல்லூரி மாணவர் பலி
கலவை அருகே மோட்டார்சைக்கிள்-கார் மோதிக்கொண்ட விபத்தில் ஆரணி கல்லூரி மாணவர் பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
விபத்து
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 19) கல்லூரி மாணவர். இவரது நண்பர்கள் அதேப்பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் (26), குமரேசன் (22). இவர்கள் மூன்று பேரும் செய்யாறு அடுத்த சேராம்பட்டு கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலுக்கு ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்கள். பின்னர் செய்யாறில் இருந்து ஆரணிநோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த தட்டச்சேரியில் ஆரணி- செய்யார் சாலையில் உள்ள வளைவில் வந்தபோது, போளூரை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (50) என்பவர் ஓட்டிவந்த காரும், மோட்டார்சைக்கிளும் மோதி்க்கொண்டன.
கல்லூரி மாணவர் பலி
இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அவர்களில் கல்லூரி மாணவர் ராமு சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்ற இருவரும் செய்யார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாழாப்பந்தல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, ராமு உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.