குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவர் கொலை?

களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து மகனை அவரது காதலி தீர்த்துக் கட்டியதாக தந்தை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-28 19:49 GMT

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து மகனை அவரது காதலி தீர்த்துக் கட்டியதாக தந்தை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதலி வீட்டுக்கு சென்றார்

குமரி-கேரள எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவருடைய மகன் ஷாரோன் ராஜ் (வயது 23). பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி ஷாரோன் ராஜ் தனது நண்பர் ஒருவருடன் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நண்பர் வீட்டின் வெளியே நின்றார். ஷரோன் ராஜ் மட்டும் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

வயிற்றுவலி; சாவு

பின்னர் சிறிது நேரத்தில் காதலியின் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ஷாரோன் ராஜ், தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அப்போது காதலி குடிப்பதற்கு கசாயமும், குளிர்பானமும் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

எனினும் அங்கிருந்து இருவரும் புறப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் ஷாரோன் ராஜிக்கு வயிற்று வலி அதிகமானதை தொடர்ந்து பாறசாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து உடல்நிைல மோசமான நிலைக்கு சென்றது.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பரிதாபமாக இறந்தார்.

தந்தை பரபரப்பு புகார்

இதுகுறித்து ஜெயராஜன் பாறசாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மகனின் காதலி திட்டம்போட்டு பெற்றோருடன் சேர்ந்து ஷாரோன்ராஜிக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து ஜெயராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னுடைய மகன் ராமவர்மன் சிறையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் எனது மகனை கட்டாயப்படுத்தி அவனது காதலி வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற ஷாரோன் ராஜிக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்துள்ளனர். இதனால் என்னுடைய மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டான். மூடநம்பிக்கையின் பேரில் என்னுடைய மகனை திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். பாறசாலை போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

உடல் உறுப்புகள் பரிசோதனை

இந்த சம்பவம் தொடர்பாக பாறசாலை போலீசார் கூறுகையில், ஷாரோன் ராஜின் பிரேத பரிசோதனையில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. அவர் தந்தை புகார் கொடுத்ததின் அடிப்படையில் உடல் உறுப்புகள் கூடுதல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பின்பு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்