கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
வேடசந்தூர் அருகே குளித்து கொண்டிருந்தபோது வலிப்பு வந்ததால் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கொண்டசமுத்திரம்பட்டியை சேர்ந்தவர் சபரீஷ் (வயது 20). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை இவர், தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் குளித்தார். அப்போது திடீரென சபரீசுக்கு வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனைக்கண்ட அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் அங்கு சென்றனர்.
பிணமாக மீட்பு
60 அடி ஆழமும், அகலமும் கொண்ட அந்த கிணற்றுக்குள் பாதாள கரண்டி மூலம் அவரை தீயணைப்பு படைவீரர்கள் தேடினர். இரவு 10 மணி வரை தேடும் பணி நடந்தது. ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து 2-வது நாளாக நேற்று காலை மீண்டும் கிணற்றில் தீயணைப்பு படைவீரர்கள் தேடினர். அப்போது சபரீஷ் பிணமாக மீட்கப்பட்டார்.
நீச்சல் தெரிந்திருந்தபோதிலும், வலிப்பு வந்ததால் அவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சபரீசின் தந்தை ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.