தேன்கனிக்கோட்டை அருகே நீரோடையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி-நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, நீரோடையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
கல்லூரி மாணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்தவர் அயாத் பாஷா. இவருடைய மகன் ஷாகின் ஷா (வயது 20). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் பி.காம். இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஷாகின் ஷா தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி செல்லும் வழியில் திருமுருக்கு வளைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு செல்ல எண்ணினார்.
இதையடுத்து அவர், அதே பகுதியை சேர்ந்த இனாயத் மகன் ஷமீர் உள்பட நண்பர்கள் 5 பேருடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றார். அங்கு நண்பர்கள் அனைவரும் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர்.
தண்ணீரில் மூழ்கி பலி
அப்போது மாணவர் ஷாகின் ஷா நீர்வீழ்ச்சியின் தண்ணீர் செல்லும் நீரோடையில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால், திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள், ஷாகின் ஷாவை காப்பாற்ற முயன்றனர்.
மேலும் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய ஷாகின் ஷாவை தேடினர். பின்னர் சில மணி நேரம் போராடி அவரை பிணமாக மீட்டனர்.
விசாரணை
இதையடுத்து அஞ்செட்டி போலீசார் அங்கு வந்து தண்ணீரில் மூழ்கி பலியான ஷாகின் ஷா நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ஷாகின் ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீரோடையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.