பெற்றோர் சண்டை போட்டதால் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி தற்கொலை
குன்றத்தூர் அருகே பெற்றோர் சண்டை போட்டதால் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
குன்றத்தூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகர், இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கங்கையம்மாள் (42). இவர்களுக்கு அரிகிருஷ்ணன் (21), பாலகிருஷ்ணன் (19) என 2 மகன்கள்.
இவர்களில் பாலகிருஷ்ணன், குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் தனது மனைவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். பெற்றோருக்கு இடையே தகராறு ஏற்பட்டால் அவர்களை பாலகிருஷ்ணன் சமாதானம் செய்து வைத்து வந்தார்.
கத்தியால் குத்தி தற்கொலை
நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், கத்தியை எடுத்து வந்து இருவரில் யாராவது ஒருவர்தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று கூறி மனைவியை குத்த போவதாக மிரட்டினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், தனது தந்தை தொடர்ந்து தகராறு செய்து வருவதால் அசிங்கமாக உள்ளதாக கூறி "யாரும் சாக வேண்டாம். நான் சாகிறேன். கத்தி யார் குத்தினாலும் குத்தும்" என்று கூறி தந்தையின் கையில் இருந்த கத்தியை பறித்த பாலகிருஷ்ணன், திடீரென தனது மார்பில் வேகமாக குத்திக்கொண்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் பாலகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.