கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த வடகண்டிகை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவா் நரசிம்மன். அவரது மகள் ரோஜா (வயது 20). இவர், ஆற்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. எஸ்சி 2-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரோஜா நீண்ட நேரமாக செல்போன் பயன்படுத்தியதாகவும், அதனை அவருடைய தந்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டுக்கொண்டார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.