விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது

விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-20 18:45 GMT

விழுப்புரத்தை அடுத்த காணை அருகே ஒருகோடி கிராம எல்லையில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர், பிணமாக கிடந்தார். அவரது உடலில் தலை, நெற்றிப்பகுதி, வாய் ஆகிய இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து காணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் அருகே உள்ள கப்பூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியன் மகன் ராஜன் என்கிற ராமன் (வயது 22) என்பதும், இவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்ததும், கல்லூரி விடுமுறை நாட்களில் சென்னையில் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

அடித்துக் கொலை

ராஜனின் உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் அவரை யாரோ அடித்துக்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர்.அதன் பிறகு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி அங்குள்ள மெயின்ரோடு வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தொடர்ந்து, ராஜனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இவர்களின் முதல்கட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

காதல் விவகாரம்

கொலை செய்யப்பட்ட ராஜன், ஒருகோடி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது பற்றி அறிந்ததும் அப்பெண்ணின் குடும்பத்தினர், ராஜனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் ராஜன் அதை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜனை அவரது நண்பரான ஒருகோடி கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகன் சத்யராஜ் (28) என்பவர் மதுஅருந்த வரும்படி அழைத்துள்ளார். அதன்படி ராஜனும், சத்யராஜூம் அதே கிராமத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக்கொண்டு அங்குள்ள ஒரு காலியிடத்திற்கு சென்றனர்.

3 பேர் கைது

அப்போது சத்யராஜின் நண்பரான விழுப்புரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் பிரபல ரவுடி லாலி கார்த்திக் என்கிற சரவணன் (30) என்பவரும் அங்கு வந்துள்ளார். பின்னர் 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அந்த சமயத்தில் ராஜனிடம் நீ காதலிப்பதாக கூறும் பெண் என்னுடைய உறவினர் என்பதால் எனக்கு பிடிக்கவில்லை, எனவே அந்த காதலை கைவிடுமாறு சத்யராஜ் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சத்யராஜூம், லாலி கார்த்திக்கும் சேர்ந்து அருகில் கிடந்த கல்லை எடுத்து ராஜனை அடித்துக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சத்யராஜ், லாலி கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த ஒருகோடி கிராமத்தை சேர்ந்த ரவீந்திரன்(40) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்