விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தாமதமாக தொடங்கியதால் கல்லூரி மாணவிகள் அவதி

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தாமதமாக தொடங்கியதால் கல்லூரி மாணவிகள் அவதியடைந்தனர்.

Update: 2022-07-11 19:07 GMT

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரசார வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இதற்காக 3 தனியார் நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் காலை 11 மணிக்கு முன்னதாகவே கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் நிகழ்ச்சி 1.15 மணி நேரம் தாமதமாக மதியம் 12.15 மணிக்கு தொடங்கியது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, எம்.எல்.ஏ., அரசு அலுவலர்கள், மாணவிகள் பின்தொடர்ந்து படித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். ஆனால் நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியதால் மாணவிகள் கால் கடுக்க நின்றும், அவ்வப்போது விட்டு, விட்டு பெய்த சாரல் மழையில் நனைந்தும் அவதிக்குள்ளாயினர்.

Tags:    

மேலும் செய்திகள்