ஆண்டிப்பட்டி பாரத் நிகேதன் கல்லூரியில் ஆண்டு விழா
ஆண்டிப்பட்டி பாரத் நிகேதன் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
ஆண்டிப்பட்டியில் உள்ள பாரத் நிகேதன் என்ஜினீயரிங் கல்லூரியில் 25-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி குழும தலைவர் மோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்று பேசினார். விழாவில் கல்லூரி குழும தலைவர் மோகன் மற்றும் துணைத்தலைவர் பிரசன்ன வெங்கடேசன் ஆகியோர் பேசுகையில், பாரத் நிகேதன் கல்லூரியில் படித்து வெவ்வேறு நாடுகளில் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் மாணவர்கள் குறித்தும், கல்லூரியின் 25 ஆண்டு சாதனைகள் குறித்தும் நினைவுகூர்ந்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், திரைப்பட நடிகருமான சவுந்தரராஜா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், இயற்கையும், சுற்றுச்சூழலும் முக்கியம் என்பதை மனதில் கொண்டு மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு மரங்களை பாதுகாக்க வேண்டும் என்றார். மேலும் தனது கல்லூரி கால நினைவுகளை மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்டார். பின்னர் பல்வேறு விளையாட்டு மற்றும் கலைப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு அவர் பரிசுகளையும், பதக்கங்களையும் வழங்கினார். பின்னர் நடிகர் சவுந்தரராஜாவுக்கு கல்லூரி சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் கல்லூரி சார்பில் தேனி, மதுரை, திண்டுக்கல் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடப்பாண்டில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு கணிதத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் கல்லூரியில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், டிரைவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. விழா முடிவில் பாரத் நிகேதன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பவுன்ராஜ் மற்றும் விவேக் ஆகியோர் செய்திருந்தனர்.