இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு
சின்னசேலத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடியிருப்புகளை திடீரென ஆய்வு செய்த கலெக்டர் ஷ்வரன்குமார் அங்கு வசிக்கும் 75 குடும்பங்களுக்கு சில்வர் பாத்திரங்களை வழங்கினார்.
சின்னசேலம்
கலெக்டர் ஆய்வு
சின்னசேலம் தெற்கு கிராம பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது முகாமில் பழுதடைந்துள்ள நிலையில் உள்ள 75 குடியிருப்புகளை பார்வையிட்ட அவர் அங்கு வசிப்பவர்களிடம் குறைகளை கேட்டார். அப்போது தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வேறு வழி இல்லாமல் பல ஆண்டுகளாக அச்சத்தோடு வசித்து வருவதாகவும், இங்கு குடிதண்ணீர் பிரச்சினை இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மாற்று ஏற்பாடு
இதையடுத்து குடியிருப்புகளில் உள்ள பழுதை சரி செய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பிடவும், இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்திய கலெக்டர் தற்போது மழைக்காலம் என்பதால் குடியிருக்க முடியாத நிலையில் உள்ள வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மாற்று ஏற்பாடு செய்து தருவதோடு, குடிநீர் பிரச்சினையை சரிசெய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
பாத்திரங்களை வழங்கினார்
தொடா்ந்து அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட கலெக்டர் அங்குள்ள சமையலர்களிடம் மாணவர்களுக்கு சமைத்து வழங்கும் உணவு தரம் பற்றி கேட்டறிந்ததோடு முகாமில் உள்ள 75 குடும்பங்களுக்கு அவர்கள் உபயோகப்படுத்துவதற்கு சில்வர் பாத்திரங்ளை வழங்கினார்.
அப்போது தாசில்தார் கமலக்கண்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.