கலெக்டர் அலுவலக வளாகத்தில்முத்தையாபுரம் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முத்தையாபுரம் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
முத்தையாபுரம் பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் முருகானந்தம், மகளிர் அணி செயலாளர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
செல்போன் கோபுரத்துக்கு எதிர்ப்பு
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெரு, வாதிரியார் தெரு, வரத விநாயகர் கோவில் தெரு, பெரியார் நகர், முஸ்லிம் தெரு, தோப்புத் தெரு பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் செந்தில் ராஜிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் குடியிருப்புக்கு அருகே செல்போன் கோபுரம் அமைக்கப்படுகிறது. செல்போன் கோபுரம் அமைக்கப்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் அந்த செல்போன் கோபுரத்தை குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
கால்பந்து மைதானம் சீரமைப்பு
காயல் சமூகநீதி பேரவை சார்பில் செயலாளர் அகமது சாகிபு தலைமையில் பேரவையினர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கால்பந்து விளயைாட்டுக்கு பெயர் பெற்றது காயல்பட்டினம். இங்க யு.எஸ்.சி மற்றும் கே.எஸ்.சி ஆகிய 2 கால்பந்து விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இந்த மைதானங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. நீண்டகாலமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த கால்பந்து அணி வீரர்கள், அன்றாட பயிற்சிக்காக நீண்ட தூரம் சென்று பயிற்சி பெற்று வருகின்றனர். இதனால் வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் யு.எஸ்.சி, கே.எஸ்.சி. ஆகிய கால்பந்து விளையாட்டு மைதானம் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகநீதி காத்த தேசிய தலைவர்களான மகாத்மா காந்தி, காயிதே மில்லத், தீரன் திப்புசுல்தான், அம்பேத்கார், தந்தை பெரியார், சுபாஷ் சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களை காயல்பட்டினம் நகராட்சியில் அமைக்க வேண்டும். துருக்கி, சிரியா நிலநடுக்க பேரிடர் மீட்பு பணிகளுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கவும், நிதி கோரி முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.