கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மழை பெய்ததால் பயிர் இழப்பீடு வழங்கக்கோரி கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-01-09 18:32 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழையை நம்பி ஏராளமான விவசாயிகள் நெல் விவசாயம் செய்திருந்தனர். தாமதமாக தொடங்கிய மழை சரியாக பெய்யாததால் விவசாயம் முற்றிலும் பொய்த்து போனது. 2 முறை வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் ஒரு சில கண்மாய்களை ஓரளவுக்கு நிரம்பியதுடன் பெருமளவில் கடலில் கலந்து வீணானது.

இதனால் அதிக அளவு கடன் வாங்கி விவசாயத்திற்காக செலவழித்த விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை கருகிய நெற்பயிர்களுடன் முற்றுகையிட்டு, பயிர் இழப்பீடு மற்றும் காப்பீடு கேட்டு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் மனு கொடுத்தனர்.

அதன்படி ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் தலைமையில் சோழந்தூர் பிர்க்காவில் 15 ஆயிரத்து 500 ஏக்கரில் நெல் விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளதாக கூறி மனு அளித்தனர். இதேபோல ஊரணங்குடி, உப்பூர், கடலூர், கூத்தன்வயல், பாரனூர் குரூப் அடந்தனார் கோட்டை, ராதானூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் பாதிக்கப்பட்டு உள்ளதால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு மனு அளித்தனர்.

இதேபோல சீனாங்குடி குரூப் பிச்சங்குறிச்சி, ராமநாதபுரம் தாலுகா அச்சடிப்பிரம்பு, கோவிந்தனேந்தல், கடலாடி தாலுகா கோட்டையேந்தல் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இழப்பீடு கோரி மனு அளித்தனர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்