அடிப்படை வசதிகள் கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், படூர்மேடு இருளர் குடியிருப்பை சேர்ந்த திரளான இருளர் இன மக்கள் நேற்று திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் படூர்மேடு இருளர் குடியிருப்பு பகுதியில் 3 தலைமுறைகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம். ஆனால், எங்களுக்கு தொகுப்பு வீடுகளோ, வீட்டுமனையோ இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரப்படவில்லை.
எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு கால தாமதம் செய்யாமல் வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் கலா தலைமையில் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இது சம்பந்தமாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலந்து சென்றனர்.