அரசம்பாளையம் கிராமத்தில் பொது இடத்தை குப்பை கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் கலெக்டரிடம் மனு

அரசம்பாளையம் பழைய காலனியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது இடத்தை குப்பை கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-05-30 12:40 GMT

நாமக்கல்:

அரசம்பாளையம் பழைய காலனியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது இடத்தை குப்பை கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

கலெக்டரிடம் மனு

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையம் பழைய காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அரசம்பாளையம் பழைய காலனி காவிரி ஆற்றங்கரையோரம் மந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் நத்தம் புறம்போக்கு நிலம் சுமார் 1½ ஏக்கர் உள்ளது. இதை எங்கள் பகுதியை சேர்ந்த குழந்தைகள் விளையாடுவதற்கும், கோவில் திருவிழாவின் போதும் பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது ஊராட்சி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் கொட்டுவதற்கு குழிகள் வெட்டப்பட்டு உள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்புகள்

பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் காலி நிலத்தை குப்பை கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும். சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஊராட்சி மூலம் குப்பைகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும். அந்த நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தவிர வேறு எதற்கும் அனுமதிக்க கூடாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களுடன் அருந்ததியர் இளைஞர் பேரவை, பொல்லான் பேரவை தலைவர் வடிவேல்ராமன் மற்றும் நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்