கைத்தறி நெசவாளர்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி நெசவாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-23 17:15 GMT

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி நெசவாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தரையில் அமர்ந்து தர்ணா

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. அப்போது கைத்தறி நெசவாளர்கள் மணி என்பவர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அறை முன் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

கைத்தறி நெசவாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வழங்காமல் இழுத்தடித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உத்தரவு பெற்றும் மாவட்ட நிர்வாகம் அதை நிறைவேற்றவில்லை. 2019-ம் ஆண்டு மீண்டும் கோட்டில் மனு செய்தபோது 217 பேருக்கு பட்டா வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் மனு முடித்து வைக்கப்பட்டது. அதில் 18 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதம் உள்ள 199 பேருக்கு பட்டா வழங்காமல் இருந்து வருகிறது. காங்கயம் தனிதாசில்தார் கோர்ட்டு மற்றும் கலெக்டர் உத்தரவை மதிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட தனிதாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும் என்று கோரி தர்ணாவில் ஈடுபடுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரேஷன் கார்டை ஒப்படைப்போம்

பின்னர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இன்னும் 1 மாதத்துக்குள் பட்டா வழங்காவிட்டால் ஆதார் கார்டு, ரேஷன் கார்டை கலெக்டரிடம் ஒப்படைப்போம் என்று கைத்தறி நெசவாளர்கள் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்