மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
காட்பாடி காந்திநகரில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் ஆய்வு நடத்திய போது மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அவர்களுக்கு பொதுவான அறிவியல் விஷயங்கள் குறித்து பாடம் எடுக்கும்போது வரைபடம் மூலம் விளக்க வேண்டும் என பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
காட்பாடி காந்திநகரில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் ஆய்வு நடத்திய போது மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அவர்களுக்கு பொதுவான அறிவியல் விஷயங்கள் குறித்து பாடம் எடுக்கும்போது வரைபடம் மூலம் விளக்க வேண்டும் என பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கல்லூரியில் ஆய்வு
காட்பாடி காந்திநகரில் அரசு கல்வியியல் கல்லூரி உள்ளது. இங்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது வளாகத்தில் முட்புதர்கள் இருப்பதைக் கண்ட அவர் அதனை தூய்மை செய்து வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் அறைக்கு சென்றவர் ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். ஒவ்வொரு பேராசிரியரின் பெயரையும் வாசித்து அவர்கள் வருகை தந்துள்ளனரா என பார்த்தார்.
பின்னர் அவர் வகுப்பறைக்கு சென்றார். அங்கு பேராசிரியர்களை மாணவர்களுக்கு பாடம் எடுக்க கூறினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வி உள்பட சில பேராசிரியர்கள் பாடம் நடத்தினர். அதனை மாணவர்களுடன் அமர்ந்து கேட்டார். முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை பாடம் எடுக்க கூறினார். ஒரு மாணவனும், ஒரு மாணவியும் பாடம் நடத்தினர்.
மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது;-
நாம் பூமியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு பூமியைப் பற்றி அதன் அடிப்படைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.அவர்களுக்கு தண்ணீரின் அவசியத்தை விளக்க வேண்டும். தண்ணீரை சேமிக்க வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உணவு உற்பத்தியை பெருக்குவது குறித்து விளக்க வேண்டும்.
பூமிக்கு மேல் உள்ள அடுக்குகளையும், பூமிக்கு கீழ் உள்ள அடுக்குகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவான அறிவியல் விஷயங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது வரைபடம் போட்டு விளக்க வேண்டும். தேர்வில் மாணவர்கள் யோசித்து எழுத வேண்டும். மனப்பாடம் செய்து எழுதக்கூடாது.
சிறந்த சமுதாயமாக...
மாணவர் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக்கும் வகையில் பேராசிரியர்கள் பாடங்களை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், ''கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்தனர். அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களுக்கான விடுதி இல்லை என்றார்கள். அது ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.