மலை கிராமங்களில் நடந்தும், மோட்டார் சைக்கிளில் சென்றும் கலெக்டர் ஆய்வு

பாம்பு கடித்து குழந்தை இறந்ததை தொடர்ந்து கலெக்டர் மலை கிராமங்களில் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2023-05-29 22:01 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுவிற்கு உட்பட்ட பீஞ்ச மந்தை, ஜார்த்தான் கொல்லை, பலாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மலைப்பகுதியில் வசிக்கும் இந்த மக்கள் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒடுகத்தூருக்கும் மற்றும் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கும் தங்களது தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.

குழந்தை சாவு

இங்கு போதிய சாலை வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பிரசவ வலி ஏற்பட்டாலோ, விஷ பூச்சிகள் கடித்தாலோ அணைக்கட்டு, ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டோலி கட்டி தூக்கி வருகின்றனர். இதுபோன்ற நேரங்களில் குறித்த நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, அத்தி மரத்துக்கொல்லை பகுதியில் வசித்து வரும் விஜி-பிரியா தம்பதியரின் 1½ வயது பெண்குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்து விட்டது. உடனடியாக சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல முடியாததால் குழந்தை பாதி வழியில் இறந்து விட்டது. சாலை வசதி இல்லாததால்தான் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டு இறந்ததாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அதற்கு மேல் பாதை வசதி இல்லாததால் இறந்த கை குழந்தை உடலுடன் பெற்றோர்களை ஆம்புலன்சில் இருந்து இறக்கிவிட்டனர் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க குழந்தையின் உடலை 10 கிலோமீட்டர் தூரம் கைகளிலேயே சுமந்து சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலெக்டர் ஆய்வு

இதனால் இங்குள்ள அல்லேரிமலை, கொல்லை, பலாம்பட்டுமலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் அத்திமரத்துக் கொல்லை மலை கிராமத்திற்கு காரில் சென்றார். அங்கு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் காரில்செல்ல முடியாததால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றும், பின்னர் மோட்டார் சைக்கிளில் அவரே ஓட்டிச் சென்றும் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் இதுகுறித்து நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:-

அடிப்படை வசதி

கடந்த 2021-ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பழங்குடியின மக்களுக்காக சாலை அமைத்து வருகிறோம். அல்லேரி கிராமத்திற்கும் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் பணிகளை தொடர வனத்துறையினர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். விரைவில் கிராம மக்களுக்கு அடிப்படைவசதி மற்றும் சுகாதார நிலையம் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்