காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு
காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.42 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர், வேளாண் உதவி அலுவலர் உள்பட பல்வேறு நிலையிலான அலுவலர்களுடன் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைந்துள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டார். விதைகளில் பூச்சிகளின் தாக்கம் ஏற்படாமல் இருக்க மருந்து தெளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையம், வேளாண் பிரிவு ஆகிய கட்டடிங்களுக்கு வெளிப்புறத்தில் வர்ணம் பூசி சீரமைக்க அறிவுறுத்தினார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் புதர்களை அகற்றி தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது ஒன்றியக் குழு துணைத்தலைவர் சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.