அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
விழுப்புரம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறையின் மூலம் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் சி.பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கன்வாடி மையத்தில் உட்கட்டமைப்பு, குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி, காற்றோட்டமான வகுப்பறை வசதிகள் உள்ளனவா என்று பார்வையிட்டார். தொடர்ந்து, அங்கன்வாடி மையத்திற்கு வருகை புரியும் குழந்தைகளின் எண்ணிக்கை விவரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து கேட்டறிந்ததுடன், குழந்தைகளின் வயதுக்கேற்ற எடை, உயரம் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்கன்வாடி மையத்தை நாள்தோறும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும், குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிபெறும் வகையில் கற்றல் உபகரணங்கள், உடல் வலிமை பெறுவதற்கான விளையாட்டுப்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று அங்கன்வாடி மைய பணியாளருக்கு கலெக்டர் சி.பழனி அறிவுறுத்தினார்.