கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நிதியுதவி அளிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற தனியார் தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி அளிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வசிக்கும் திருநங்கைகளுக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் (2017-18)-ன் கீழ் திருநங்கைகள் வாழ்வாதாரத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆட்டுக்கொட்டகை அமைத்து 100 ஆடுகள் மற்றும் ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான கோழிகள் கொள்முதல் செய்து பயனாளிகளுக்கு வழங்கிட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு 14 லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாயும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிதி ஒதுக்கீடு 4 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயும் கொண்டு செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒதுக்கீடு 4 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் நிதியிலிருந்து ரூ.3 லட்சம் கால்நடைகள் வளர்ப்பதற்கும், 2 ஏக்கர் நிலம் வாங்கவும், ரூ.30 ஆயிரம் கால்நடை பராமரிப்பு உபகரணங்கள் வாங்கவும், 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கோழிகள் கொள்முதல் செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நிதி ஒதுக்கீடு ரூ.4 லட்சத்து 43 ஆயிரத்தை அளிக்க விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை 4.11.2022-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் தொடர்புகொள்ள வேண்டும். இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.