அருங்காட்சியகம் அமையும் இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமையும் இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-20 19:00 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமையும் இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

அருங்காட்சியகம்

மத்திய அரசு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இடம் தேர்வு உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைத்து உலகம் முழுவதும் உள்ள ஆதிச்சநல்லூர் பொருட்களை மீட்டு வந்து இங்கு வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் ஆதிச்சநல்லூர் ஏ, பி, சி சைட் என மூன்று இடங்களில் அகழாய்வு செய்து அந்த இடங்களில் உள்ளது உள்ள படியே சைட் மியூசியம் அமைக்கும் பணியும் உலகத்தரத்தில் நடைபெறவுள்ளது. இந்த பணிக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

கலெக்டர் ஆய்வு

இதற்காக மத்திய மந்திரி வருகை தரும் இடம், மேடை அமையும் இடம், அடிக்கல் நாட்டும் இடம் உள்பட இடங்களை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் விளக்கமளித்தார். மேலும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அருங்காட்சியகம் அமைய உள்ள பணிகள் குறித்தும், தொல்லியல் துறையினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். அதன் பின் அவர் ஆதிச்சநல்லூர் பரம்பில் பி சைட் என்ற இடத்திற்கு வந்தார். அங்கு ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் மேல் கண்ணாடி மூலம் அமைய உள்ள சைட் மியூசியத்தை நேரில் பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை வட்டார வரலாற்று நூலை அருண்ராஜ், கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் நூலின் ஆசிரியரும், தொல்லியல் துறை அலுவலருமான யதீஸ்குமார், தொல்லியல் ஆய்வாளர் அறவாழி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரியாவிடை

தட்டார்மடம் ரஸ்தா தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு பேச்சித்தாய் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சுற்றுப்புற வீட்டில் மின் வசதி இருந்தும், இவர் வீட்டுக்கு மின்சாரம் இல்லாமல் இருந்து வந்தது. பிளஸ்-2 மாணவியான பேச்சித்தாய், விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியதையடுத்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கவனித்து அவரது வீட்டுக்கு மின் இணைப்ப வழங்கிட உத்தரவிட்டார். அதனையடுத்து உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் கலெக்டரின் சிறப்பு நிதியில் அவருக்கு வீடு கட்டவும் அனுமதியளித்தார். அதன்பேரில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் வந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், வீடு கட்டும் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது அந்த மாணவியிடம் தான் பணிமாறுதலாகி செல்வதாக கூறி நினைவு பரிசு வழங்கி பிரியாவிடை பெற்றார். அப்போது மாணவி, அவரது சகோதரர் சார்பில் கலெக்டருக்கு நினைவு பரிசு வழங்கினர்.

அப்போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கண்ணன், சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, உதவி செயற்பொறியாளர் மாலா, இளநிலை பொறியாளர் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம், சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க செயலாளர் லூர்துமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்