முறைகேடு நடக்கும் நெல் கொள்முதல் நிலையங்களை மூட கலெக்டர் உத்தரவு

முறைகேடுகள் நடைபெறும் நெல்கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு கலெக்டர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-21 20:56 GMT


முறைகேடுகள் நடைபெறும் நெல்கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு கலெக்டர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகளவு முறைகேடுகள் நடக்கிறது. குறிப்பாக கள்ளிக்குடி பகுதி திருமால், குலமங்கலம், அலங்காநல்லூர் மேட்டுப்பட்டி, திருவாலவாயநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் ஒரு மூடைக்கு ரூ.50 முதல் ரூ.65 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

அதே போல் அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் தனியார்கள் ஏன் தலையீடு செய்கின்றனர். இது தொடர்பாக பல புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. உசிலம்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பால் விவசாயிகளிடமிருந்து ஆவின் நிறுவனத்திற்கு கொள்முதல் செய்யும் பால் லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை பணம் குறைத்து வழங்குகின்றனர். மேலும் பால் முகவருக்கு வழங்கக்கூடிய ஊக்க தொகையை வழங்காமல் முறைகேடு செய்கின்றனர். பசுக்களுக்கான தீவனம் தொகையும் முறையாக வழங்குவதில்லை. ஆவின் பால் நிறுவனத்திற்கு வழங்கக்கூடிய பால்களை தனியார் நிறுவனங்களுக்கு ஆவின் அதிகாரிகளே உடந்தையாக இருந்து விற்பனை செய்து வருகின்றனர். அதனால் ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

ஆவின் முறைகேடு

வைகை அணையில் இந்த ஆண்டு நீர்மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி இந்த ஆண்டு வைகை அணையை உடனடியாக தூர்வார வேண்டும். தற்போது அதிகளவில் அணையில் சகதி உள்ளது. எனவே உடனடியாக வைகை அணையில் தேங்கி உள்ள வண்டல் மண்ணை அகற்றி சீரமைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அதிகளவு தண்ணீரை சேமிக்க முடியும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

அதற்கு பதிலளித்து கலெக்டர் பேசும்போது, நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடக்கா வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. புகார் கூறப்பட்ட நெல்கொள்முதல் நிலையங்கள் மூடப்படும். மேலும் தனியார் தலையிட்டால், அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆவின் அலுவலர்கள் பேசும்போது, ஆவினில் தற்போது பயனாளர்களின் வங்கி கணக்கில்தான் பணம் செலுத்தப்படுகிறது. எனவே முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும் எந்த இடத்தில் முறைகேடு நடக்கிறது என்பதை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்