போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்னையில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழா நேரலை ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுடன் உறுதிமொழி எடுத்து கொண்டார். தொடர்ந்து போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி திருவள்ளூர் ரெயில் நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைபோல் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் பள்ளியில் போதை இல்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் போதையை ஒழிப்போம் தேசத்தை காப்போம், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று கோஷங்களை மாணவிகள் கூறியபடி ஊர்வலமாக சென்றனர்.