இ-சேவை மையங்கள் உதவியுடன் 186 வகையான சான்றிதழ்கள் பெறலாம்-கலெக்டர் கார்மேகம் தகவல்
இ- சேவை மையங்கள் உதவியுடன் 186 வகையான சான்றிதழ்கள் பெறலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
அரசு திட்டங்கள்
தலைவாசல் தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மையத்தை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அரசு இ-சேவை மையங்கள் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக செயல்பட்டு வருகிறது. அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையான வகையில் பொதுமக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதன்படி பொதுமக்கள் அரசு துறையின் சேவைகளை எவ்வித சிரமமும் இன்றி விரைவாக பெற்று பயனடையும் வகையில் மாவட்டம் முழுவதும் 500 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இ-சேவை மையங்கள் மூலம் கடந்த ஒரு வருடத்தில் 4 லட்சத்து 34 ஆயிரத்து 253 பேர் பயனடைந்து உள்ளனர்.
186 வகை சான்றிதழ்கள்
மேலும் இ.சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் சாதிச்சான்றிதழ் மற்றும் பிறப்பு, இறப்பு, வருமானம், முதல் பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி, விதவை பெண் சான்றிதழ். ஓய்வூதியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மேலும் ஊனமுற்றோருக்கான சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
இவை தவிர மின் கட்டணம் செலுத்துதல், புதிய ரேஷன் கார்டு பெறுதல் உள்ளிட்ட 186 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் உதவியுடன் பொதுமக்கள் எளிதாக பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.