செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு

செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-09-02 23:00 GMT

திட்டப்பணிகள்

சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 15.57 கிலோ மீட்டர் நீளத்திற்கு 13 சாலை பணிகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

இதேபோன்று செட்டிமாங்குறிச்சி ஊராட்சி அரியாம்பாளையத்தில் 15-வது மத்திய நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.7.37 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினையும், புதிய மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சத்தில் சவுரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறைக் கட்டிடம் அமைக்கும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.

சாலை அமைக்கும் பணி

தொடர்ந்து செட்டிமாங்குறிச்சி அங்கன்வாடி மையம் அருகில் மாவட்ட ஊராட்சி திட்டத்தின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.16.38 லட்சம் மதிப்பீட்டில் செட்டிமாங்குறிச்சி ஊரக விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுப்பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், ரூ.27.75 லட்சத்தில் கசிவு நீர் குட்டை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.7.11 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 26 வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகி, எடப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் அன்புராஜ், பிரதீப்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்