பயன்படுத்தாத கிணறு, குவாரிகளில் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

பயன்படுத்தாத கிணறுகள், குவாரிகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-08-13 19:00 GMT


பயன்படுத்தாத கிணறுகள், குவாரிகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆழ்துளை கிணறு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :-

பயன்படுத்தாத கிணறுகள், குவாரிகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை முறையாக கணக்கெடுக்க வேண்டும். இவ்வாறான ஆபத்தினை ஏற்படுத்த கூடிய நீர்நிலைகளின் அமைவிடம், அகலம், ஆழம், ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் விபத்துகள் ஏற்படாதவாறு கிணறுகளை சுற்றி தடுப்புசுவர் அமைத்தும், ஆழ்துளை கிணறுகளை மூடிகளை கொண்டு அடைத்து குழந்தைகள் அருகில் செல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

குவாரி

கைவிடப்பட்ட குவாரிகளில் இளைஞர்களும், குழந்தைகளும் குளிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதை உடனடியாக வேலி அமைத்து தடுக்க வேண்டும். இதனை அந்தந்த குவாரி உரிமையாளர்கள் மூலமாக செயல்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இதற்காக பசுமை நிதி மற்றும் மாவட்ட கனிம நிதியை பயன்படுத்தலாம்.

சாலையோரங்களில் கட்டுமானப்பணிக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் கால்வாய்களின் இருப்பை அறிவுறுத்தும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

தடுப்பு நடவடிக்கை

கிணறுகள், ஆழ்துளைகிணறுகள், சாலையோரங்களில் கட்டுமானப்பணிக்காக தோண்டப்படும் பள்ளங்கள், கால்வாய்கள், கைவிடப்பட்ட குவாரிகள் ஆகியவற்றில் விபத்துகள் ஏற்படாத வகையில் உள்ளாட்சி அமைப்புகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். கைவிடப்பட்ட கிணறுகள் மற்றும் குவாரிகளை விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பாக வைக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தலைமை செயலர் அறிவுறுத்தலின் படி தங்கள் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளைகிணறுகள், கட்டுமானப்பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள், ஆழமான கால்வாய்கள் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு செய்தும், மேற்கூறியவாறு அந்தந்த துறைகள் மேற்கொண்ட விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்