குளித்தலை பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

குளித்தலை பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-07-12 18:31 GMT

குளித்தலை அருகே உள்ள வதியம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து பதிவேடுகளிலுள்ள பதிவுகளின்படி உணவு பொருட்களின் இருப்பு சரியாக உள்ளதா என்று பார்வையிட்டார்.

குளித்தலை நகராட்சி பகுதியிலுள்ள கடம்பர் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் 2 அங்வாடி மையங்களை பார்வையிட்டு "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் கீழ் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை பதிவேடுகளை பார்வையிட்டு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து மருத்துவர்களின் ஆலோசனைபடி குழந்தைகளுக்கு உணவுகளை வழங்க அறிவுறுத்தினார். அங்கன்வாடிமையம் மற்றும் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்காக வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு அதன் தரத்தினை பரிசோதித்து பார்த்தார். நாள்தோறும் வழங்கப்படும் உணவு சுவையாகவும் தரமாகவும் சமைத்து தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு வழங்குவதை போல் கனிவுடன் வழங்க வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து குளித்தலை காவேரி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் சாப்பாட்டு முறைகள், அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் மற்றும் மாணவியர்களிடம் கேட்டறிந்து தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஹசீனாபேகம், வருவாய், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்