பஞ்சமூர்த்தி தேர்கள் சீரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்தி தேர்கள் சீரமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-28 16:39 GMT

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்தி தேர்கள் சீரமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் 7-ம் நாள் விழாவில் நடைபெறும் பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும் ஒன்றாகும். வருகிற 3-ந்தேதி பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 5.30 மணி முதல் காலை 7 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து முருகர் தேர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மகாதேர், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என தனித்தனியாக இழுக்கப்படும். கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

இதையொட்டி பஞ்சமூர்த்திகளின் தேர்களும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தேரடி வீதியில் நிறுத்தப்பட்டுள்ள 5 தேர்களையும் நேரில் சென்று பார்வையிட்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

ஆய்வின் போது அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்