லால்குடியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
லால்குடியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
லால்குடி ஒன்றியத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வருகை தந்தார். அவர் மாடக்குடி, அப்பாத்துறை, தெற்கு சத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சமயலறைக் கட்டிடத்தையும், பள்ளிவிடை கிராமத்தில் நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாடக்குடி அப்பாத்துறை தெற்கு சத்திரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும், கற்பிக்கும் முறைகள் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். தெற்கு சத்திரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணிகளையும், தாளக்குடி ஊராட்சியில், அகிலாண்டபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், சக்தி கார்டன் பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ஜெசிந்தா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.