திண்டிவனம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
திண்டிவனம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.6.40 லட்சத்தில் சிமெண்ட் சாலையின் தரம், ரூ.15 லட்சத்தில் அய்யனார் கோவில் குளம் புனரமைக்கும் பணி, ரூ.7 லட்சத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடம் கட்டும் பணி, நூலகம் புதுப்பித்தல் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிளை தரமாகவும், விரைந்து முடிக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அதே பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட கலெக்டா் பழனி, குழந்தைகளின் வருகை பதிவேடு, உணவு பட்டியல் பதிவேடு, ஊட்டச்சத்துப் பதிவேடுகள் போன்றவை குறித்து ஆய்வு செய்ததுடன், அங்கு தயார் செய்யப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
விடுதிகளில் ஆய்வு
இதேபோல் பட்டணம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்பாக்கத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி, திண்டிவனத்தில், அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி, மாணவிகள் விடுதிகளிலும் கலெக்டா் பழனி ஆய்வு செய்தார்.
பின்னர் ரோஷனை போலீஸ் நிலையத்தில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் 9 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு மையத்தின் மூலம் கண்காணிக்கப்படுவதை பார்வையிட்ட அவர் வீடியோ பதிவுகள் முறையாக செய்யப்படுகிறதா, பதிவுகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.