தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு
திண்டுக்கல்லில், தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் பூங்கொடி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தனியார் பள்ளி வாகனங்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பே, தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படுகிற வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்ததை பொறுத்தவரை மொத்தம் 515 தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று முதல் தொடங்கியது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் இந்த ஆய்வு பணி நடந்தது.
கலெக்டர் ஆய்வு
அதன்படி முதல் நாளான நேற்று திண்டுக்கல், வத்தலகுண்டு, நத்தம், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான மினி பஸ்கள், வேன்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களை கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அரசு அறிவித்த விதிமுறைப்படி அந்த வாகனங்களுக்கு மஞ்சள் நிற வர்ணம் தீட்டப்பட்டுள்ளதா?, வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பள்ளி வாகனம் என எழுதப்பட்டுள்ளதா?, மாணவர்களுக்கான இருக்கை வசதி முறையாக செய்யப்பட்டுள்ளதா?, வாகனத்தின் காப்பீட்டு காலம் காலாவதியாகாமல் உள்ளதா? என கலெக்டர் ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு கேமராக்கள்
மேலும் வாகனத்தின் முன்புறம் மற்றும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், அவசர கால கதவுகள், மாணவ-மாணவிகள் புத்தக பைகளை வைக்கும் இடம், முதலுதவி பெட்டகம், வேக கட்டுப்பாட்டு கருவி, ஆகிய வசதிகள் அரசு பரிந்துரைப்படி செய்யப்பட்டுள்ளதா? என்றும் கலெக்டர் சோதனை செய்தார்.
பின்னர் பள்ளி வாகன ஓட்டிகளிடம் கலெக்டர் பேசினார். அப்போது அரசு நிர்ணயித்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆய்வின் போது அந்த விதிமுறைகளில் எந்தவித தளர்வும் வழங்கப்படாது. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இயக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றார்.
பாதுகாப்பு ஒத்திகை
ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, ஜாஸ்மீன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர்.